கொரோனாவுக்கு முன், அரசியல் கட்சி தொடங்குவதில் ரஜினி உறுதியாக இருந்தார் என அவரது சகோதரர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் நேற்று இரவு முதல் ஒரு கடிதம் பரவி வருகிறது. அதில் ரஜினியின் உடல்நலம் குறித்தும், தற்போதைய கொரோனா காலத்தில் ரஜினி மக்களை சந்தித்து அரசியல் பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணா புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், “கொரோனாவுக்கு முன், அரசியல் கட்சி தொடங்குவதில் ரஜினி உறுதியாக இருந்தார். கொரோனா காரணமாக கட்சி பெயர், கொடி, அறிவிப்பது தள்ளிப்போனது. இல்லையென்றால் கண்டிப்பாக அறிவித்திருப்பார். கொரோனா காலம் என்பதால் எனது தம்பியின் உடல்நலனே முக்கியம். ரஜினியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருப்பது அவசியம். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் தெரியவரும்.” எனத் தெரிவித்தார்.