“ராஜனுக்கு பதில் சொன்னால் சலசலப்பு ஏற்படும்” - ராஜேந்திர பாலாஜி

“ராஜனுக்கு பதில் சொன்னால் சலசலப்பு ஏற்படும்” - ராஜேந்திர பாலாஜி
“ராஜனுக்கு பதில் சொன்னால் சலசலப்பு ஏற்படும்” - ராஜேந்திர பாலாஜி
Published on

இரட்டை தலைமையில் அதிமுக ஆளுமையுடன் உள்ளது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம் 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

இந்நிலையில் அதிமுகவிற்குள் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது அதிமுகவிற்கு ஒரே தலைமைத் தேவை என மதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியதுதான் இந்தச் சர்ச்சைக்கு காரணம். இரட்டை தலைமையால் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும் எனவும் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

அத்துடன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று நன்றி செலுத்தியுள்ளார். ஆனால் வெற்றி பெற்ற 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று வெற்றியை சமர்ப்பிக்கவில்லை. இது அவர்கள் குற்றமா? அல்லது தலைமை குற்றமா? அவர்களை தடுப்பது யார்? எனவும் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பி இருந்தார். சமீப காலமாகவே தேர்தல் பேச்சே ஓடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் எழுந்திருப்பதை ராஜன் செல்லப்பாவின் இந்தப் பேச்ச காட்டுவதாக உள்ளது.

இந்நிலையில் இரட்டை தலைமையில் அதிமுக ஆளுமையுடன் உள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த, இடைத்தேர்தலில் வென்ற 9 எம்எல்ஏக்களை தடுத்ததாக கூறுவது பொய்யானது எனவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் அதிமுகவில் ஒரே தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது பற்றி கருத்து தெரிவித்தால் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதனிடையே ஜெயலலிதாவை போல் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துகிறார்கள் என்றும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com