முதலமைச்சரின் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் 13.5 மில்லியன் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோனும், மூன்று ஆண்டுகளுக்கு பயன்படும் வகையில் இண்டெர்நெட் கனெக்ஷனுடம் சேர்த்து வழங்க திட்டமிட்டிருப்பதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.
இதற்கான ஏலத்தில் பங்கேற்க மூன்று பிரபல நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும் நேற்று (ஆக.,20) அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக PTI மூலம் அறிய முடிகிறது.
இந்த திட்டத்திற்கான ஏலம் குறித்து இந்த மாத இறுதிக்குள் உயர் குழு முடிவெடுக்கும் என்றும், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வருவதற்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்கள் வழங்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், அதற்கான ஆன்லைன் டெண்டர் கடந்த புதனன்று (ஆக.,18) தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் ராஜ்காம்ப் என்ற நிறுவனம்தான் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறது. முதல்வர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருக்கும் அனைத்து செல்ஃபோன்களிலும் 2 சிம் கார்டுகள் போடும் அளவுக்கும், அதில் ஒன்று ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம்கார்டும் கொடுக்கப்பட இருக்கிறது.
இந்த திட்டம் நடப்பாண்டு பட்ஜெட்டின் போது ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டால் அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பது நினைவுக்கூரத் தக்கது.