திருவண்ணாமலை திமுக எம்.பி அண்ணாதுரை மற்றும் தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் முரசொலி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
திருவண்ணாமலை திமுக எம்.பி அண்ணாதுரை வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக தேவனாம் பட்டியில் உள்ள வீட்டில் பறக்கும் படை சோதனை நடத்திய நிலையில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் அதே போல தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் முரசொலிக்கு சொந்தமான 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், வருமான வரித்துறையினர் திமுக பிரமுகர் பலரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை வீட்டுக்கு காலை 7 மணி அளவில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புடன் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 15 பேர் சோதனை நடத்தத் துவங்கினர். 2 மாடிகள் கொண்ட அந்த வீட்டின் அறைகள், லாக்கர்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். இதையறிந்த திமுக தொண்டர்கள் அதிக அளவில், நீலாங்கரை வீட்டின் முன் குவிந்துள்ளனர்.
இதேபோல, அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும், ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா ஆகியோரின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகிறார்கள். 30க்கும் அதிக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலையில் பிரசாரத்திற்காக வேட்பாளர் மோகனின் வீட்டுக்கு வந்த தொண்டர்கள், வருமானவரித்துறை சோதனை நடப்பதை அறிந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்தநிலையில், தற்போது ஸ்டாலின் மகள் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.