ராகுல் காந்தி பீகாருக்கு சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவ்விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் பல மாநிலங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் பீகார் மாநிலத்திலுள்ள சமஸ்டிபூரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்க விமானம் மூலம் டெல்லியிலிருந்து புறப்பட்டார்.
இந்நிலையில் ராகுல் காந்தி சென்ற விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவ்விமானம் மீண்டும் டெல்லிக்கே திருப்பியது. இத்தகவலை ராகுல் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “விமான கோளாறு காரணமாக இன்றைய பரப்புரைகள் தாமதமாகியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட பகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
பீகார் மாநிலம் சமஸ்டிபூரிலும் அடுத்து ஒடிஷா மாநிலம் பாலசோரிலும் இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் சங்கம்நேரிலும் ராகுல் காந்தியின் பரப்புரை செய்ய இன்று திட்டமிடப்பட்டிருந்தார். இதற்கிடையில் ராகுல் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை தொடங்கியுள்ளது. ராகுல் சென்ற சிறிய ரக விமானத்தில் 10 பயணிகளும் பைலட்டுகள் இருவரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.