அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
டிசம்பர் 16-ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஆனால் நேற்றுவரை வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அவரது வேட்பு மனுவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் முன்மொழிகின்றனர். நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை 3.30 மணியளவில் வெளியாகும். ராகுல் காந்தியை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாத நிலையில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு யாராவது போட்டியிட்டால் டிசம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து, அதை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும்.
கடந்த 1998ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சுமார் 19 ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் உள்ளார். இதனையடுத்து, கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு ராகுல்காந்தி வருவார் என்று கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக கடந்த 2013ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்பட்டார்.