அம்பானியின் நிறுவனத்திற்கு ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் டஸால்ட் நிறுவனம் 284 கோடி ரூபாயை முதல் கட்ட லஞ்சமாக வழங்கியதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதோடு மத்திய அரசின் போர் விமான தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தை பயன்படுத்தாமல் ரிலையன்ஸ் அனில் அம்பானியின் நிறுவனத்தை தேர்வு செய்தது குறித்தும் காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. இதுதொடர்பாக டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி எரிக் டிராப்பியர் “அம்பானிகள் மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடன் டசால்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது” என எக்னாமிக்ஸ் டைம்ஸ்க்கு அவர் பேட்டியளித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தத போது, ரஃபேல் போர் விமான தயாரிப்பில் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட காரணம், அதன் வசம் நிலம் இருந்தது தான் என டசால்ட் நிறுவனத் தலைவர் டிராபியர் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நிலமே டசால்ட் நிறுவனம் அளித்த 284 கோடி ரூபாயில் வாங்கியதுதான் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இழப்புகளை சந்தித்து வரும் ஒரு நிறுவனத்திற்கு டசால்ட் நிறுவனம் 284 கோடி ரூபாய் அளித்திருப்பது லஞ்சம் அளித்ததை தெளிவாக்குவதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக தீவர விசாரணை நடத்தப்பட்டால் பிரதமர் மீதான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.