காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 3 மாநிலங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது போல் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் நடைப்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இதனை தெரிவித்தார்.நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், ஒவ்வொரு தேர்தலிலும் இளைஞர்களும் பெண்களும் அதிகளவில் பங்கேற்பதை தமது கட்சி உறுதி செய்யும் என்றும் அரசியலில் பெண்கள் தலைமைப் பதவிகளுக்கு வர வேண்டும் என தமது கட்சி விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் 3 மாநிலங்களில் விவசாயக் கடன்களை காங்கிரஸ் கட்சி ஆளும் அரசுகள் தள்ளுபடி செய்துள்ளதாகவும் மக்களவைத் தேர்தலில் வெல்லும் பட்சத்தில் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ராகுல் தெரிவித்தார்.பிரதமர் மோடி தனது 15 நண்பர்களுக்கு அதிகபட்ச வருவாயை உறுதி செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் ஆனால், தமது கட்சி அனைத்து இந்தியர்களுக்கும் குறைந்தபட்ச வருவாயை உறுதிப்படுத்தப் போவதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், குறைந்தபட்ச வருமானத்தை எல்லா ஏழைகளுக்கும் உறுதி செய்யும். அதாவது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களும் சராசரி வருமானத்தை பெறுவார்கள். இதனால், பசி, வறுமை எதுவும் இந்தியாவில் இருக்காது என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.