பிரதமர் பதவிக்காக ராகுல்காந்தி என்றுமே தன்னை பரிந்துரை செய்துகொண்டது கிடையாது என மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிற மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ஸ்டாலின்,“நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். எனவே ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். ராகுல் காந்தியே வருகே. நல்லாட்சி தருக” எனத் தெரிவித்தார்.
ஸ்டாலின் இந்தப் பேச்சு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே அதிர்வலையை ஏற்படுத்தியது. மத்தியில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் அடுத்த பிரதமர் வேட்பாளர் தொடர்பான பல யூகங்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையில் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது பல விமர்சனங்களுக்கு உள்ளானது.
ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழ்ந்த விவகாரம் மத்தியின் காங்கிரஸ் கூட்டாளிகளான மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர்களுக்கு பெரிய அபிப்ராயத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாகவே இன்று மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்கும் விழாவில் அவர்கள் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து என்டிடிவிக்கு கமல்நாத் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில் ''பிரதமர் பதவிக்காக ராகுல்காந்தி என்றுமே தன்னை பரிந்துரை செய்துகொண்டது கிடையாது. கூட்டணி கட்சிகளும் ஆலோசிக்காமல் காங்கிரஸ் என்றுமே தனித்து முடிவெடுக்காது. அனைத்து கூட்டணி கட்சிகளும் ஆலோசித்து முடிவு எடுக்கக் கூடிய விவகாரம் அது. அனைவரும் ஒருமனதாக ஒரு பெயரை தேர்வு செய்வார்கள். அவரே பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்தார்.
மேலும் ''மம்தாவும், மாயாவதியும் பதவியேற்பில் பங்கேற்காததற்கு சரியான காரணங்கள் உள்ளன. நான் மாயாவதியிடம் பேசினேன். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னார். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரிய போது அதை அவர் மனமுவந்து செய்தார். ஆதரவு தொடர்பான கடிதத்தையும் என்னிடம் அனுப்பி வைத்தார். அகிலேஷும் விழாவுக்கு வருவதாகவே தெரிவித்தார். எங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டபோது வாட்ஸ் அப்பில் தங்களது ஆதரவு கடிதத்தை அனுப்பி வைத்தார் அகிலேஷ்” என்றும் தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி குறித்து பேசிய கமல்நாத், ''இன்று மம்தாவின் அம்மாவுக்கு நினைவு நாள். நான் அவருடன் பேசும்போதே அவர் அம்மாவின் நினைவுநாள் பூஜையில் இருந்தார். அதுமட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 3 பதவியேற்புகள் நடைபெறுவதால் நேரத்தைக்கூட மாற்றி வைக்கமுடியவில்லை. மம்தா வருவதற்கே விரும்பினார்'' என்று தெரிவித்தார்.