ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் அரசுடன் பேச்சு நடத்தியதாக ராகுல் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அலுவலகம், தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம் மக்களின் வரிப்பணம் 30 ஆயிரம் கோடி ரூபாய் திருடப்பட்டு, தொழிலதிபர் அனில் அம்பானியிடம் வழங்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். இதற்கு ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் கேள்வி எழுப்பும் காங்கிரஸ் கட்சி, யாருக்கு உதவ நினைக்கிறது என நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, பிரதமர் அலுவலகம் தனியாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியற்கு, பாதுகாப்பு அமைச்சக முன்னாள் துணைச் செயலாளர் எதிர்ப்பு தெரிவித்ததாக ஒரு ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியைச் சுட்டிக் காட்டினார்.
மேலும் இருதரப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக் குழுயில் இடம்பெறாத பிரதமர் அலுவலக அதிகாரிகள், பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்க வேண்டாம் எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கருக்கு அத்துறையின் துணைச் செயலாளர் எஸ்.கே.சர்மா எழுதிய கடிதத்தை வெளியிட்ட ஆங்கில நாளேட்டின் செய்தியையும் ராகுல் சுட்டிக் காட்டி, இதன் மூலம் மக்களின் வரிப்பணம் 30 ஆயிரம் கோடி ரூபாய் திருடப்பட்டு தொழிலதிபர் அனில் அம்பானி வசம் சென்றுள்ளதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுலின் பேச்சு ஆபத்தானது. மக்களுக்கு எதிராக மோடி செயல்படுவதாக சித்தரிக்கும் வகையில் பேசி ஆட்சியை மாற்ற ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என்றார். இதற்கிடையே, ஆங்கில நாளேடு செய்தி குறித்து பாதுகாப்புத்துறை செயலர் ஜி.மோகன் குமார் வெளியிட்ட விளக்கத்தில், ஊடகங்களில் வெளியான கடிதம் ரஃபேல் விலைத் தொடர்பானது அல்ல என்றும், ராணுவ ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பான பொதுவான விதிமுறைகள் குறித்தது என்றும் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார்.