பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது நோபல் பரிசை ரபீந்திரநாத் தாகூர் விட்டுக் கொடுத்தார் என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் கூறியுள்ளார். தாகூரின் பிறந்தநாளையொட்டி உதய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த கருத்து மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிப்லப் தேவின் கருத்து சர்ச்சைக்குள்ளாவது இது முதல் முறையல்ல.
கடந்த சில நாட்களாகவே பிப்லப் குமார் கூறும் கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. முதலில் மகாபாரத காலத்திலேயே இணைய வசதி இருந்தது என்று கூறி அவர் சர்ச்சையில் சிக்கினார். அதனையடுத்து, சர்வதேச அழகிப் போட்டிகள் குறித்தும், டயானா ஹைடன் குறித்தும் பிப்லப் தேவ் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல், மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு சரிபட்டு வரமாட்டார்கள் என்றும், இளைஞர்கள் பீடா கடை போட்டு பணம் சம்பாதிக்கலாம் என்றும் அவர் பேசியதற்கு விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், ரபிந்திரநாத் தாகூர் குறித்த அவரது கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக தாகூர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசை 1941ம் ஆண்டு இறக்கும் வரை அவர் உடன் வைத்திருந்தார். தாகூர் தனது நோபல் பரிசை விட்டுக் கொடுக்கவில்லை. உண்மையில், 1915ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு தாகூருக்கு வழங்கிய ‘சர்’ பட்டத்தை அவர் திருப்பி அனுப்பினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை கண்டித்து இதனை செய்தார்.
இதனையடுத்து, தாகூர் நோபல் பரிசை விட்டுக் கொடுத்தார் என்ற பிப்லப் தேவ்வின் கருத்தை இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது. பிப்லப் தேவ் மேடையில் பேசுவதற்கு முன்பாக வீட்டில் சரியாக ‘ஹோம் வொர்க்’ செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளனர்.