புதியதலைமுறையின் 'பெண்' வார இதழ் சார்பில் 'அச்சம் தவிர்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
சமூக அக்கறையுடன் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் தேவையான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை புதிய தலைமுறை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதிய தலைமுறையின் 'பெண்' வார இதழ் சார்பில், பெண்களின் ஆளுமை மேலாண்மைக்காக 'அச்சம் தவிர்' என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எம்ஓபி வைஸ்ணவா பெண்கள் கல்லூரியில் இன்று நடைபெற்றது. விழாவில், புதியதலைமுறையின் தலைமை செயல் அதிகாரி ஷ்யாம் குமார், கல்லூரியின் முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், ரேஸ் நிறுவனத்தின் முத்துக்குமார், மனநல மருத்துவர் ஜனனி ரெக்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரச்னைகளை எப்படி தைரியமாக எதிர்க்கொள்வது என்பது குறித்து அச்சம் தவிர் நிகழ்ச்சி மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வந்தாலும் கூட, இன்றைய காலத்திலும் பல பிரச்னைகளை பெண்கள் சந்தித்துதான் வருகின்றனர். எனவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என பெண்கள் தெரிவித்துள்ளனர்.