பத்திரிகை நிருபரிடம் சாதி குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி தென்காசி தொகுதியில் போட்டியிட்டது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார். நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய கிருஷ்ணசாமி, மக்களவைத் தேர்தலில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும் அனைத்து சமுதாய மக்களும் தமக்கு வாக்களித்துள்ளதாகவும், இது ஒரு மிகப்பெரிய சமுதாய மாற்றம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஊடகங்களில் பொய்யான பிரச்சாரத்தினால்தான் பாஜக - அதிமுக கூட்டணி இவ்வளவு பெரிய தோல்வி அடைந்துள்ளதாக அவர் விமர்சித்தார். ஊடகங்கள் நேர்மறையான செய்திகளை வழங்க வேண்டும் என்றும் பாஜக அரசு செய்துள்ள திட்டங்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து பாராட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவரும் தொடர்ச்சியாக பதில் அளித்தார்.
அப்போது, கிருஷ்ணசாமிக்கு செய்தியாளர்களுக்கும் இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது. அந்நேரம் கிருஷ்ணசாமி ஒருமையில் பேசியதுடன், ஒரு செய்தியாளரை பார்த்து, ‘நீ என்ன ஊருப்பா, என்ன சாதி’ என்று கேட்டார். இதனால், செய்தியாளர்கள் கோபமடைந்தனர். அப்போது அங்கிருந்த கிருஷ்ணசாமி ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
‘கேள்வி எழுப்பினால் கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுங்கள். அதனைவிட்டு என்ன சாதி என்று எப்படி கேட்கலாம்’ என செய்தியாளர்கள் கேட்டனர். ‘என்ன சாதி என்று கேட்பதில் தவறு ஏதுமில்லை. நிருபர்களும் சாதியாகத்தானே இருக்கிறீர்கள்’ என மீண்டும் அதே கருத்தினை கூறினார். இதனால், இந்தச் செய்தியாளர் சந்திப்பில் நீண்ட நேரம் சலசலப்பு நிலவியது.