சசிகலா தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திமுக கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கபட வேண்டும் என்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நயினார் குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை இரண்டு சகோதரர்கள் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, கடந்த 4 ஆண்டுகளாக அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. இதனையடுத்து சசிகலா என்ற அந்த பெண் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.இதில் குற்றம்சாட்டப்படும் ஒருவர் திமுக இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகி என்று தெரிகிறது. இதனால், இந்த விஷயம் சமூக வலைதளத்தில் பேசு பொருளானாது.
இந்நிலையில், திமுக எம்பி செந்தில் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், “ நைனார்குப்பம் சசிகலா தற்கொலையில் சந்தேகம் மற்றும் மிரட்டபட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் நிலையில் உண்மையான குற்றவாளிகளை (எங்கள் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும்) கண்டறிந்து உரிய தண்டனை வழங்கபட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.