புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறார்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ள போதும் அவை போதவில்லையோ என்ற கேள்வியையே இது போன்ற மனதை கனக்க செய்யும் சம்பவங்களால் எழுகிறது.
வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த அந்த சின்னஞ்சிறு பட்டாம்பூச்சி இனி வீடு திரும்ப போவதில்லை என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். ஜூன் 30ஆம் தேதி நண்பர்களோடு விளையாடி கொண்டிருந்த அந்த 7 வயது சிறுமியை காணாமல் பல இடங்களிலும் தேடிய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இரவு முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், அடுத்த நாள் ஊரில் கருவேல மரங்கள் அடர்ந்த கண்மாய் கரையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் உடல்கிடந்த கோலத்தை பார்த்து கிராம மக்கள் மட்டுமல்ல காவல்துறையினரே கதிகலங்கிதான் போனார்கள். அதனால் நேரடியாக களத்தில் இறங்கினார் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார். உடல் முழுக்க கடித்தும், அடித்தும் ஏற்படுத்தப்பட்ட காயங்கள், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்தது. உடற்கூராய்வில் அது உறுதியானது. விசாரணையில் சிறுமியின் ஊரில் பூக்கடை நடத்தி வந்த 25 வயதான சாமிவேல் என்ற ராஜாதான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
கோவிலுக்கு பூ கொடுக்க சிறுமியை அழைத்துச் சென்ற ராஜா, வீடு திரும்பும் வழியில் ஊரணியில் சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், கூச்சலிட்டதால் கருவேல மரக்கட்டையில் சிறுமியின் தலைலையை மோதி கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். போக்சோ சட்டத்தின் கீழ் ராஜா கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவர முடியாதபடி உடனடியாக சிறையிலடைத்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும், இது போன்ற நஞ்சு மனம்படைத்தவர்களால் பிஞ்சுகளின் உயிர் பறிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வது வேதனையளிக்கிறது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கொடுஞ்செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், குடும்பத்தினர் உடலை பெற்றுக்கொண்டு நல்லடக்கம் செய்தனர். படுகொலை செய்யப்பட்ட சிறுமி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்ட நிதியுதவி தொகையாக அவரின் குடும்பத்திற்கு ரூ.8.25 லட்சம் அறிவிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக ரூ.4.12 லட்சம் சிறுமியின் பெற்றோரிடம் அளிக்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.