புதுக்கோட்டையில் சிறுமி மற்றும் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு ஏழாண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (22). இந்த இளைஞர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கேபிள் டிவியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு திலகர் திடல் பகுதியில் உள்ள காம்ப்ளக்ஸில் கேபிள் வேலை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது கேபிள் வயரை இழுத்து பிடிப்பதற்காக அதே காம்ப்ளக்ஸில் வசிக்கும் ஒரே வீட்டை சேர்ந்த 8 வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுவனை உதவிக்கு அழைத்துள்ளார். இருவரையும் மாடிக்கு அழைத்துச் சென்ற ரகுபதி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து 10 வயது சிறுவன் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அந்த காம்ப்ளக்சில் இருந்தவர்கள் ரகுபதியை பிடித்து தர்மஅடி கொடுத்து புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து மகளிர் காவல் நிலையம் ரகுபதி மீது போஸ்கோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, எட்டு வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்காக குற்றவாளி ரகுபதிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பையடுத்து குற்றவாளியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.