புதுச்சேரி தேர்தல்; திடீரென வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கிய பாமக; காரணம் என்ன?

புதுச்சேரி தேர்தல்; திடீரென வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கிய பாமக; காரணம் என்ன?
புதுச்சேரி தேர்தல்; திடீரென வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கிய பாமக; காரணம் என்ன?
Published on

புதுச்சேரி பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த பாமக, திடீரென வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளது.

பாஜக, என்ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இடம்பெற்றிருந்தது. அதில் என்.ஆர். காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, பாஜகவுக்கு 9 இடங்களும் அதிமுகவுக்கு 5 இடங்களும் பகிரப்பட்டது. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டின்போது உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியில் இருந்து பாமக விலகியது.

அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக கூறி வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று பாமக வேட்பாளர்கள் 10 பேரும் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

இது குறித்து பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் கூறும் போது, “ கூட்டணியில் உரிய மரியாதை அளிக்கப்படுமென பாஜக தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றோம்” என்றார்.

முன்னதாக, புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 485 வேட்புமனுக்களில், 450 மனுக்கள் ஏற்கப்பட்டன. அவற்றில் பாமகவினர் உள்ளிட்ட 126 பேரின் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, 324 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com