ஒகி புயலால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 மீனவர்களை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
புதுச்சேரி மாநிலம் நரம்பை, பனித்திட்டு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் சென்ற படகு, ஒகி புயலின் போது லட்சத்தீவு பகுதியில் கரை ஒதுங்கியது. அங்கிருந்து மீட்கப்பட்ட மீனவர்கள் புதுச்சேரி அழைத்துவரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அவர்களை அம்மாநில முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஒகி புயல் பாதிப்பு குறித்து விவரங்களையும் கேட்டறிந்தார்.
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், படகு கவிழ்ந்ததில் காயமடைந்திருந்த 5 மீனவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை முடிவெடுக்கும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.அப்போது அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் புதுச்சேரி அதிகாரிகள் உடன் இருந்தனர்.