மதுரை திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல லட்சங்கள் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருமங்கலத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு முன்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினுடைய தொழில்நுட்பப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த வாளி உட்பட பரிசுப்பொருட்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசுப்பொருட்களை ஆளும் கட்சியினர் பதுக்கிவைத்திருப்பதாக எதிர்கட்சிகளான திமுக மற்றும் அமமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிடங்கில் சோதனை நடத்துவதற்கு முன் அங்கிருந்தவர்களை எதிர்க்கட்சி நிர்வாகிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் கப்பலூர் குடோனில் பரிசுப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற எதிர்க்கட்சியினரின் புகார் குறித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியபோது, “தேர்தல் அறிவிப்பிற்கு முன் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகியோருக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த கணினி மற்றும் ஆடைகள் போன்ற பரிசுப் பொருட்கள் அம்மா கோவில் திறப்பு விழாவிற்கு வருகைதந்த பொதுமக்களுக்கும் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும் வழங்குவதற்காக வைத்திருந்தது. தேர்தல் நன்னடத்தை விதிமுறையின் காரணமாக பரிசுப் பொருட்களை குடோன் ஒன்றில் பாதுகாப்பாக வைத்திருந்தோம்” என தெரிவித்தார்.