ஏழை மக்களின் பணத்தை அபகரிப்பதற்காகவே, காங்கிரஸ் அதிகாரத்துக்கு வரத் துடிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்துக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகளில் மூட்டை மூட்டையாக பணம் பிடிபட்டதாக சுட்டிக்காட்டினார்.
இதனைதொடர்ந்து மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் என காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் ஆக மாறிவிட்டதாக மோடி கூறினார். தன்னை மேலும் 5 ஆண்டுகள் பிரதமராக அமர்த்தினால், ஊழல்வாதிகளை சிறையில் தள்ளுவதாக மோடி குறிப்பிட்டார். மேலும், தீவிரவாதத்தை ஒழிக்க தான் உழைத்து வருவதாகவும், ஆனால் காங்கிரஸ் தன்னை ஒழிக்க எண்ணுவதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.