கலாமின் கனவை நனவாக்க பிரதமர் மோடி அழைப்பு

கலாமின் கனவை நனவாக்க பிரதமர் மோடி அழைப்பு
கலாமின் கனவை நனவாக்க பிரதமர் மோடி அழைப்பு
Published on

நாடு தனது 75‌வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் அப்துல் கலாமின் கனவுகளை அடைவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,  ராமேஸ்வரத்துக்கு வந்ததை பாக்கியமாக கருதுகிறேன் என்று தமிழில் கூறிய அவர், தனது பேச்சுகளை இந்தியில் தொடந்தார். அப்போது, ராமேஸ்வர புனித மண்ணை தொடுவதில் பெருமிதம் அடைகிறேன். இது அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு 1897-ல் சுவாமி விவேகானந்தர் கால்பதித்த மண். இந்த மண் குறிப்பிட்ட மதத்துக்கான பூமி அல்ல. ஆன்மீக பூமியாக கருதப்படுகிறது. அப்துல் கலாம் போன்ற ஆழந்த சிந்தனையாளரை கொடுத்த பூமி ராமேஸ்வரம். கலாம் நினைவு நாளில் இங்கு வருவது எனது பாக்கியம்.

 கலாம் அவர்கள் மறைந்தபோது அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தேன். அதன்படி தற்போது கட்டி முடிக்கப்பட்டு இன்று அந்த நினைவுச் சின்னம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கலாமின் சிந்தனைக்கேற்ப அவரது மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கலாம் மூலம் ராமேஸ்வரம் மேலும் புகழை எட்டியுள்ளது. குறுகிய காலத்தில் நினைவிடப் பணிகள் நிறைவுபெற்றது, அரசாங்கத்தையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதுபோன்றதொரு சூழ்நிலையில், ஜெயலலிதா இல்லாதது வருத்தமளிக்கிறது. அவர் இருந்திருந்தால், இந்தப் பணியை மேலும் பாராட்டியிருப்பார்.  

முன்னேறிய இந்தியாவைக் காண கலாம் கனவு‌கண்டார். இந்த நாடு 2022ல் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, அவருடைய கனவுகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் ந‌மது செயல்பாடுகள் இருக்கும். இந்த நாடு 75வது சுதந்திரத்தை கொண்டாடும்போது எல்லா விதத்திலும் முன்னேறிய ஒரு பாரதத்தை நாம் காணவேண்டும். அதுதான் அப்துல் கலாமிற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். இந்த ராமேஸ்வரத்தில் ராமர் பாலம் கட்ட ஓரு சின்னஞ்சிறு அணில் உறுதுணையாக இருந்தது. அப்படி அந்த அணில் போல ஒரு உயர்ந்த இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் செயலாற்றவேண்டும்.
 தமிழக அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. புதிய இந்தியா என்பது தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமாகாது. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படும்’ எனத் தெரிவித்தார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com