இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கிரீமிலேயர் வருமான உச்ச வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதர பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்களை விலக்கும் கிரீமிலேயர் எனப்படும் இட ஒதுக்கீட்டு கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்த்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசு பணிகளில் உள்ள 27 சதவிகித இட ஒதுக்கீட்டை, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழுமையாக வழங்காமல் இருப்பது வேதனை அளிப்பதாகக் கூறி இருக்கும் ஸ்டாலின் இதர பிற்படுத்தப்பட்டோரின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அளித்த பரிந்துரைப்படி, கிரீமிலேயர் உச்ச வரம்பை 15 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு புறம்பான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.