கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு பயணம். தாய்மைக்கான இந்த பயணத்தில் மாறுபட்ட உணர்ச்சிகள் கலந்திருந்தாலும், பரவிக்கொண்டிருக்கும் இந்த தொற்றால் மன அழுத்தம் மற்றும் பதற்ற நிலை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் மன ஆரோக்யம் மிகமிக அவசியம்.
கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்
கர்ப்பிணிகள் பொதுமக்களுக்கு கூறியுள்ள வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்கவேண்டும். அதாவது அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வெளியே செல்ல நேரிட்டால் முகக்கவசம் மிக அவசியம். அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும். தேவையான முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்தாலே மனம் நிம்மதியடையும்.
இது சோதனைகாலம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்
7 மாதகாலத்தில் அனைத்தும் எவ்வாறு விரைவாக மாறிவிட்டன என்பதை பற்றி சிந்தியுங்கள். அதை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கும்போது பிறக்கவிருக்கும் குழந்தையை கவனிப்பதில் கவனம் சென்றுவிடும். இது சோதனைகாலம் என்றாலும் இதிலிருந்து ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கமுடியும்.
அன்புக்குரியவர்களிடம் நெருக்கமாக இருங்கள்
சமூகவிலகலால், உங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்காதது வெறுப்பாக இருக்கலாம். எனவே தொலைபேசி அல்லது வீடியோ கால்ஸ் மூலம் எப்போதும் தொடர்பில் இருங்கள். நேருக்குநேர் சந்திக்கமுடியாவிட்டாலும் உணர்வுப்பூர்வமாக இணைந்திருங்கள்.
கொரோனா பற்றி அதிகம் ஆராய்வதை விட்டுவிடுங்கள்
கொரோனா வைரஸ் பற்றிய வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை தெரிந்துவைத்துக் கொள்வது நல்லது என்றாலும், தொற்றுநோய் பற்றிய பிற தகவல்களை அதிகம் பெறவேண்டிய அவசியம் இல்லை. இதனால் தேவையில்லாத கவலை மற்றும் பதற்றம் அதிகரிக்கும்.
குழந்தைபிறப்பு பற்றிய ஆன்லைன் வகுப்புகள்
தாய்மைக்கான உங்கள் பயணம் பற்றி அறிந்துகொள்வதிலும், குழந்தை பிறப்பிலும் சமூக விலகல் நடவடிக்கைகள் ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. இதுபற்றிய ஆன்லைன் வகுப்புகளில் சேருவது கர்ப்பகாலத்தில் குழந்தை மற்றும் உங்களை பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ள உதவும்.
உங்களுக்கான வழக்கத்தை உருவாக்குங்கள்
வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தாலும் யோகா, தியானம் மற்றும் சில எளிதான உடற்பயிற்சிகளை அன்றாட வழக்கமாக்கலாம். தாய்மை பற்றிய புத்தகங்களைப் படிக்கலாம்.
ஆன்லைனில் உளவியல் நிபுணரை தொடர்புகொள்ளலாம்
சொந்த கவலைகள் மேலோங்கும்போது தொழில்முறை ஆலோசனை பெறுதல், மகப்பேறு மருத்துவரிடம் வழக்கமான ஆலோசனை பெறுதல் போன்றவை ஆறுதலாக இருக்கும். குறிப்பாக மனச்சோர்வையும், பதற்றத்தையும் உணரும்போது உளவியல் நிபுணரை தொடர்புகொள்ளுங்கள்.