”தோற்றால் உயிரை விடுவேன் என சொல்லவில்லை; அது போலியான பதிவு”- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

”தோற்றால் உயிரை விடுவேன் என சொல்லவில்லை; அது போலியான பதிவு”- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
”தோற்றால் உயிரை விடுவேன் என சொல்லவில்லை; அது போலியான பதிவு”- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
Published on

தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் போஸ்டர் செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முகநூலில் விளக்கம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கர் கண்ணீர் சிந்துவது போல் ஒரு போஸ்டரை தயார் செய்து அதில், இந்த தேர்தலில் தான் வெற்றி பெறாவிட்டால் உயிரை விட்டுவிடுவேன் என்று அவர் கூறுவது போல் சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பதிவிற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முகநூலில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் இது முழுக்க முழுக்க தவறான செய்தி. என் தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியிருக்கும் நற்பணிகள் மீதும் என் மக்களின் மீதும் நான் வைத்திருக்கும் நம்பிக்கை இமயம்போல உயர்ந்தது உறுதியானது. இப்படிப்பட்ட கோழைத்தனமான வார்த்தைகளை எனக்கு சிந்திக்கக்கூடத் தெரியாது. நான் நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டவன்.

எனது முகநூல் (Dr.c.vijayabaskar), டிவிட்டர் (vijayabaskaroft) இன்ஸ்டாகிராம் (vijayabaskaroft) பக்கங்களில் என் கைப்பட நான் பதிவிடும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே முற்றிலும் உண்மையானவை மற்ற குழுப்பதிவுகளிலோ பிற பக்கங்களிலோ என்னைப்பற்றி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. இந்த போஸ்டர் செய்தி முற்றிலும் பொய்யானது, எனக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் சித்தரிக்கப்படுபவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஜயபாஸ்கர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com