பொல்லார்டின் பிரச்சனைதான் என்ன? எப்போதுதான் கம்பேக் கொடுக்கபோகிறார்?

பொல்லார்டின் பிரச்சனைதான் என்ன? எப்போதுதான் கம்பேக் கொடுக்கபோகிறார்?
பொல்லார்டின் பிரச்சனைதான் என்ன? எப்போதுதான் கம்பேக் கொடுக்கபோகிறார்?
Published on

தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்று மும்பை அணி கம்பேக் கொடுக்க தொடங்கிவிட்டது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆட தொடங்கிவிட்டார். கூடவே சேர்ந்து இஷன் கிஷனும் ஃபார்முக்கு திரும்பிவிட்டார். வேலைக்கே ஆகமாட்டார்கள் என பென்ச்சில் வைக்கப்பட்ட டிம் டேவிட், டேனியல் சாம்ஸ் எல்லாம் மீண்டு வந்து மிரட்டலான பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்துவிட்டனர். ஆனால், ஒரே ஒரு ஆள் மட்டும் ஃபார்முக்கு வராமல் நழுவிக்கொண்டே இருக்கிறார். மும்பை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கும் பொல்லார்ட்தான் அந்த வீரர்.

2010 லிருந்தே மும்பை அணியின் ஒவ்வொரு வெற்றி தோல்வியிலுமே முக்கிய பங்களிப்பை கொடுத்து கூடவே இருந்தவர் பொல்லார்ட். 5 கோப்பைகளை வென்றிருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா இல்லாத சமயங்களில் அந்த அணிக்கு பொல்லார்ட்தான் கேப்டனாகவே செயல்படுவார். இதிலிருந்தே அணிக்குள் அவரின் முக்கியத்துவத்தையும் அணி அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். இதனால்தான் மெகா ஏலத்திற்கு முன்பாகவே 6 கோடி ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்டை தக்கவைத்தும் கொண்டது.

மும்பை அணி பொல்லார்ட் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நியாயம் செய்யும் வகையில் அவர் இந்த சீசனில் ஆடவே இல்லை. ஆடியிருக்கும் 10 போட்டிகளில் 129 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 109.32 மட்டும்தான். 2011 சீசனில் பொல்லார்டின் ஸ்ட்ரைக் ரேட் 109.7 தான். இதுவரை இதுதான் அவரது கரியரில் மோசமான ஐ.பி.எல் சீசனாக இருந்தது. இந்த 2022 சீசனில் அதையும் முறியடித்து வேகமாக ரிவர்ஸ் கியரில் பொல்லார்ட். பின்னேறிக்கொண்டிருக்கிறார்

ஐ.பி.எல் வரலாற்றில் பொல்லார்டிடம் இந்தளவுக்கு மந்தமான ஆட்டத்தை எந்த சீசனிலும் பார்த்ததில்லை. சரி, பொல்லார்ட் எங்கேதான் கோட்டைவிடுகிறார்? ஏன் இவ்வளவு பெரிய சறுக்கல்?

குஜராத்திற்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நேற்று ஆடியிருந்தது. இந்த போட்டியில் பொல்லார் 14 பந்துகளில் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகியிருந்தார். ஸ்பின்னரான ரஷீத்கான் பொல்லார்டின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். தொடர்ச்சியாக நான்கு பந்துகளை டாட் ஆக வீசிவிட்டு ஐந்தாவது பந்தில் ஒரு லெக் ப்ரேக்கில் பொல்லார்டின் ஸ்டம்புகளை தகர்த்திருப்பார். இந்த 5 பந்துகளிலுமே பொல்லார்ட் ரொம்பவே அசௌகரியமாகத்தான் காணப்பட்டார். முதல் பந்து லெக் ப்ரேக் அதிலேயே பொல்லார்ட் பீட்டன் ஆகியிருந்தார். அடுத்து தொடர்ச்சியாக கூக்ளிக்களை வீசி விட்டு ரஷீத்கான் மீண்டும் ஒரு லெக் ப்ரேக்கை வீச அதை எதிர்கொள்ள முடியாமல் ஸ்டம்பை பறிகொடுத்து பெவிலியனுக்கு திரும்பியிருப்பார். இந்த போட்டி என்றில்லை இந்த சீசன் முழுவதுமே பொல்லார்ட் ஸ்பின்னர்களுக்கு எதிராக தட்டுத்தடுமாறி கொண்டுதான் இருக்கிறார். அதுதான் அவரின் வழக்கமான அதிரடி ஆட்டம் வெளிப்படாமல் இருப்பதற்கும் மிக முக்கிய காரணமாகவும் இருக்கிறது.

மும்பை அணி இதுவரை 10 போட்டிகளில் ஆடியிருக்கிறது. 10 போட்டிகளிலும் பொல்லார்ட் ப்ளேயிங் லெவனில் இருந்தார். 10 போட்டிகளிலும் பேட்டிங்கும் ஆடியிருந்தார். இந்த 10 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் நாட் அவுட்டாக இருந்தார். மீதமுள்ள 9 போட்டிகளில் விக்கெட்டை விட்டிருக்கிறார். இந்த 9 போட்டிகளில் 3 முறை மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவுட் ஆகியிருக்கிறார். ஒரு முறை ரன் அவுட். மீதமிருக்கும் 5 முறையும் ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் அவுட் ஆகியிருக்கிறார்.

விக்கெட் விடுதல் என்பதை தாண்டி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக திணறியிருக்கிறார். அதுதான் பிரச்சனை. இந்த சீசனில் 129 ரன்களை அடித்திருக்கும் பொல்லார்ட் 118 பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த 118 பந்துகளில் 83 பந்துகளை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எதிர்கொண்டிருக்கிறார். இந்த 83 பந்துகளில் 103 ரன்களை அடித்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 124. அதேநேரத்தில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 35 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 74 மட்டுமே. ஒட்டுமொத்தமாக 6 பவுண்டரிக்களையும் 8 சிக்சர்களையும் அடித்திருக்கிறார். அதில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 1 பவுண்டரியையும் ஒரு சிக்சரையும் மட்டுமே அடித்திருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களோடு ஒப்பிடும்போது ஸ்பின்னர்களுக்கு எதிராக எந்தளவுக்கு சிரமப்பட்டிருக்கிறார் என்பதை இந்த தரவுகளின் மூலமே புரிந்துக்கொள்ள முடியும்.

டெல்லிக்கு எதிரான முதல் போட்டியிலேயே குல்தீப் யாதவிடம்தான் விக்கெட்டை விட்டிருந்தார். ராஜஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் சஹால் மற்றும் அஷ்வினுக்கு எதிராக 6 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன்னை கூட எடுக்கமுடியாமல் அவதியுற்றிருந்தார். பெங்களூருவிற்கு எதிராக ஹசரங்கா வீசிய முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருந்தார். நேற்று ரஷீத்கானுக்கு எதிராக செய்வதறியாது திகைத்து நின்றார். இவர்கள் மட்டுமில்லை. க்ரூணால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், தீக்சனா, ராகுல் சஹார் என அத்தனை ஸ்பின்னர்களுக்கு எதிராகவும் திணறித்தான் போயிருக்கிறார்.

கடந்த ஆண்டுதான் அகிலா தனஞ்செயாவின் ஓவரில் அசால்ட்டாக 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். ஐ.பி.எல் லிலுமே கூட இதற்கு முன்னர் ஸ்பின்னர்களை வைத்து பிறுத்தெடுத்திருக்கிறார். ஆனால், இந்த சீசனில் என்னவோ தெரியவில்லை தொடர்ந்து சொதப்புகிறார். அவரும் பழைய பொல்லார்டாக சீக்கிரமே கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com