'கறுப்பர் கூட்டம்' யூடியூப் சேனலுக்கு நிதி கொடுப்பது யார்? கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட சொன்னது யார்? என்பது குறித்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள செந்தில் வாசனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
'கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் தொடர்பாக வெளியான ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் பால்கனகராஜ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த வாரம் புகார் அளித்தார். அது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை 16ம் தேதியன்று புதுச்சேரி அரியாங்குப்பம் போலீசில் சுரேந்தர் சரணடைந்தார். அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து தி.நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஓட்டேரியைச் சேர்ந்த சோமசுந்தரம், மறைமலை நகரைச்சேர்ந்த குகன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் யூடியூப் சேனலுக்கு பரிந்துரைக் கடிதம் எழுதி அனுப்பி உள்ளது. அதனைத்தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்த 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் முடக்கப்பட்டு, சேனல் செயல்படாத அளவுக்கு முடக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில் வாசனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார். நேற்றிரவு முதல் செந்தில் வாசனிடம் சைபர் கிரைம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ தொடர்பான முடிவு எப்படி எடுக்கப்பட்டது. எதனடிப்படையில் அதற்கான தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டன? யூடியூப் சேனலுக்கு யாரெல்லாம் ஸ்பான்சர் கொடுத்துள்ளனர்? நிதி எப்படி கிடைக்கிறது? வங்கி பண பரிமாற்ற பரிவர்த்தனைகள் குறித்து செந்தில் வாசனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்தில்வாசன் தான் யூடியூப் சேனலின் நிதி தொடர்பான விஷயங்களை கவனித்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.