பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
வாரணாசியில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, கங்கை நதியில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய இந்தியா உரிய பதிலடி கொடுத்து வருகிறது எனக் கூறினார். புல்வாமாவில் இந்திய வீரர்கள் 40 பேரை பயங்கரவாதிகள் கொன்றனர் என்றும், அதற்கு பதிலடியாக அதே பகுதியில் 42 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
வாரணாசி தொகுதி மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் இந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டதாக தம்மால் கூற முடியாது என தெரிவித்த மோடி, ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும், வளர்ச்சித் திட்டங்களும் சரியான திசையில் சென்றுக் கொண்டிருப்பதாக கூறினார். கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் உண்மையான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
இந்நிலையில், வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பரப்புரை பேரணியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத் உடன் பங்கேற்றார். அதேபோல, பிரதமர் மோடி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருப்பார் எனக் கூறப்படுகிறது.