இமாச்சலப் பிரதேச சாலையோரக் கடையில் காஃபி அருந்திய படங்களை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அங்குள்ள 66 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் பதவிக்கு ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். இன்று காலை 11 மணிக்கு சிம்லாவில் உள்ள ரிட்ஜே மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டது தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். சிம்லாவில் உள்ள சாலையோரக் கடையில் மக்கள் மத்தியில் மோடி காஃபி அருந்துவது போன்ற படத்தை பதிவிட்டிருந்தார்.
இருபது வருடங்களுக்கு முன்பு கட்சி பணிக்காக இமாச்சலப் பிரதேசத்துக்கு அடிக்கடி வந்ததை நினைவு கூர்ந்த மோடி, தற்போது வரை காஃபியின் சுவை நன்றாக உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
இமாச்சல முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூருக்கு மோடி நினைவு பரிசு அளிப்பது போன்ற படமும், பதவியேற்பு விழா நிகழ்ச்சி, மக்கள் அளித்த வரவேற்பு உள்ளிட்டவை தொடர்பான படங்களை மோடி பதிவிட்டுள்ளார்.