உலக வரலாற்றில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறை சரித்திரமிக்க சாதனையைப் படைத்துள்ளது. ஆம், விண்ணுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் இன்று மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றுள்ளது. அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
தென்னாப்ரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இணையதளம் வாயிலாக இணைந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உற்சாகம் மூட்டினார்.
பின்னர் சந்திரயான் 3 வெற்றியைக் குறித்து பிரதமர் மோடி இணையதளம் மூலமாக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது, பிரதமர் பேசிய பொழுது:
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் பகுதியை தொட்டு சாதனை படைத்ததுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை. நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரை இறக்கிய முதல் நாடு இந்தியா.
இந்த வெற்றிக்கு உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கோடானுகோடி நன்றி. நிலவின் தென் துருவத்தை அடைந்ததன் மூலம் யாரும் அடையாத வெற்றியை இந்தியா அடைந்திருக்கிறது.
”நிலா... நிலா... ஓடிவா...” என்ற பாடலை மெய்ப்பித்திருக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி.
இதன் நிலவுக்கு மனிதனை அனுப்புவது தான் அடுத்தக்கட்ட திட்டம். மாபெரும் சாதனை படைத்திருக்கிறது இஸ்ரோ. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும்” என்றார். பிரதமர் மோடியின் முழு பேச்சை இந்த காணொளி தொகுப்பில் பார்க்கலாம்.