“சந்திரசேகர் ராவுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” - பினராயி விஜயன்

“சந்திரசேகர் ராவுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” - பினராயி விஜயன்
“சந்திரசேகர் ராவுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” - பினராயி விஜயன்
Published on

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று 5-வது கட்டமாக 51 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேற்று சந்தித்து பேசினார். திருவனந்தபுரத்தில் மாலை 6 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அது குறித்த அரசியல் நிலவரங்களை இந்தச் சந்திப்பின்போது இரு தலைவர்களும் பேசியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சந்திர சேகர் ராவ் உடனான சந்திப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். “சந்திர சேகர் ராவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசனை செய்தோம். மத்தியில் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என கேசிஆர் தெரிவித்தார். அதனால், மாநில கட்சிகள் புதிய ஆட்சியை அமைப்பதில் பிரதான பங்கு வைப்பார்கள். பிரதமர் வேட்பாளர் குறித்து எதுவும் பேசவில்லை” என்றார் பினராயி விஜயன்.

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைய சந்திரசேகர் ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். பினராயி விஜயனை தொடர்ந்து கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் அவர் சந்திக்கவுள்ளார். மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரும் கூட காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 3-வது அணி மத்தியில் அமைய சந்திரசேகர் ராவ் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இதற்காக திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com