மெஜாரிட்டியை நிரூபிக்க கோரிய மனு: ஆளுநருடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவைப் பற்றி ஆளுநருக்கு நினைவூட்டியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். அதற்கு ஆளுநர், யோசித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்ததாகவும் திருநாவுக்கரசர் கூறினார்.
முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. மைனாரிட்டியாக உள்ள அரசு தொடர்ந்து நீடிக்கக் கூடாது. பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சிகள் சார்பில், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கடிதம் கொடுத்திருந்தார். அவர்களுடன் காங்கிரஸ் கொறடா விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அபுபக்கர் ஆகியோரும் இருந்தனர்.
இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் தலைவர் என்கிற முறையில் ஆளுநரிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். அப்போது, ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனு குறித்து குறிப்பிட்டேன். அதற்கு ஆளுநர் யோசித்து உரிய நடவடிக்கை எடுப்பேன்” என உறுதியளித்தார்.
முதலமைச்சர் பழனிசாமியை நீக்கக் கோரி டிடிவி தினகரன் அணி சார்பில் உள்ள எம்எல்ஏக்களும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.