பெரியகுளம் அதிமுக வேட்பாளர் முருகன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில், ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கிறது. அதே நாளில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. இதையடுத்து அதிமுக மற்றும் திமுக கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் பெரியகுளம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் முருகன் திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக எம். மயில்வேல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.மயில்வேல், அல்லிநகரம் ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி, சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலில் பெரியகுளம் (தனி) தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்குப் பதிலாக அதிமுக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக எம்.மயில்வேல் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(முருகன்)
கடந்த சில வருடங்களாக, வேட்பாளர் முருகன் தொகுதிக்கு வராமல் சென்னையில் இருப்பதால், அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்ததாகக் கூறப்பட்டது. அதோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் கதிர்காமுவுக்கு சவால் கொடுக்கும் வகையில் வேட் பாளரை நிறுத்த வேண்டும் என்றும் அதிமுகவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர் முருகன் இன்று மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளதால் பெரியகுளம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.