ஜவுளிக்கடையை காலி செய்ய மறுத்ததால் ஜேசிபி மூலம் இடித்து தள்ளிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை கே.புதூர் பழைய பேருந்து நிலையம் அருகே லூர்து அன்னை மாதா ஆலயம் பல ஆண்டுகளாக உள்ளது. இந்த தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தில் துணிக்கடை, பழச்சாறு கடை, மளிகைக்கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 100ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் கடைகளை அகற்ற தேவாலய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அங்கு வின்சன் சகாயராஜ் என்பவர் 25 வருடங்களுக்கு மேலாக துணிக்கடை நடத்தி வருகிறார். இதனால் அவர் கடையை காலி செய்ய மறுத்ததால் தேவாலய சபை உறுப்பினர்கள் ஜவுளிக்கடையை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் கடையில் வைத்திருந்த பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வின்சென்ட் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தேவாலய உறுப்பினர்களான ஜான், பாலு, சபரியார் உள்ளிட்ட 12 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.