காசு கொடுத்து ஓட்டு வாங்க நினைத்தால் எங்கள் வீட்டு கழுதை கூட ஓட்டுப்போடாது என்ற வாசகத்தை எழுதி கழுதையின் முகத்தில் கட்டிவிட்டு மலைக்கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகமலை ஊராட்சியின் ஒரு பகுதியான ஊரடி, ஊத்துக்காடு, குறவன் குழலி, கருங்கல் பாறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதியை இதுவரை எந்த அரசாங்கமும் செய்து தரவில்லை. இதனால் இன்று மலைகிராம மக்கள் ஒன்றாக திரண்டு வந்து பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை பகுதியில் தங்களின் ரேஷன் கார்டுகளை சாலையில் போட்டு தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் தொகுதியில் வேட்பாளராக வெற்றி பெற்ற தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், சாலை வசதியை செய்து தருவதாக வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்த நிலையில் இன்று வரை சாலை வசதி இல்லாததால் அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசியை கூட 500 ரூபாய் செலவு செய்து தங்கள் இல்லங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளதாக கூறினர். தொடர்ந்து சாலை வசதியின்றி பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாகக் கூறி, வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் அங்கு விளைவிக்கும் விளை பொருட்களை சுமந்துவரும் கோவேரி கழுதையில், ‘காசு கொடுத்து ஓட்டு வாங்க நினைத்தால் எங்கள் கழுதை கூட ஓட்டுப்போடாதது' என்ற வாசகத்தை எழுதி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.