கோவா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக உள்ள சூழலில் அங்குள்ள இதர கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றன.
கோவா மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாரதிய ஜனதாவுக்கு பிற கட்சிகள் போட்டிபோட்டு ஆதரவை தருகின்றன. கோவா மாநிலத்தில் இரண்டு இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருந்த போதும் அந்தக் கட்சி பாஜகவிற்கு ஆதரவு வழங்காது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மகாராஸ்டிராவாதி கோமந்தக் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டும் இந்த கட்சி இதேபோல தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியிருந்தது. இதற்காக அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடமும் வழங்கப்பட்டிருந்தது.
அதேபோல கோவா ஃபார்வர்ட் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த முறையும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, பிறகு அதனை முறித்துக் கொண்டிருந்த இந்த கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தாலும் தனது ஆதரவை பாஜகவிற்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர மூன்று சுயேச்சைகள் வெற்றி பெற்றிருப்பதால் அவர்களும் பாஜகவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.