நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரஹாத் ஜோஷி, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.
புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்களுக்கான நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் வருகின்ற ஜூன் 17ம் தேதி தொடங்கவுள்ளது. ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜூலை 5 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. 40 நாட்கள் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
கூட்டத் தொடர் தொடங்க இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரஹாத் ஜோஷி, சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கூட்டத் தொடருக்கு முன்பாக சந்திப்பது என்பது வழக்கமான நிகழ்வுதான் என்று கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா காந்தியை தொடர்ந்து, மாநிலங்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத்தை ஜோஷி சந்தித்தார். அத்துடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலுவையும் அவர் சந்தித்துள்ளார். நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவது குறித்து இந்தச் சந்திப்புகளின் போது அவர் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.