இந்தியாவின் அழகை எப்போது எந்த வகையில் காட்சிப்படுத்தினாலும் ஒரு நொடி நிறுத்தி நிதானமாக பார்த்துச் செல்லாதவர்களே இருந்திட முடியாது. அதுவும் ரயில் பயணம் என்றால் சொல்லவா வேண்டும்? அது ஒரு வகையான ரம்மியமானதாகத்தான் இருக்கும். அந்த ரயில் எப்படி செல்கிறது என்ற ரம்மியத்தை இந்திய ரயில்வே துறை ட்ரோன் மூலம் படம் பிடித்திருக்கிறது.
அதன்படி, ராஜஸ்தானில் உள்ள பசுமையான தாரா காட்ஸின் அற்புதமான காட்சியை மேற்கு மத்திய ரயில்வே துறை மற்றும் இந்திய ரயில்வே துறையின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் ட்வீட்டில் கோட்டா-நாக்டாவில் உள்ள தாரா காட்ஸ் வழியே பசுமையான சூழலில் செல்லும் விரைவு ரயிலின் பனோரோமிக் காட்சி இது. இயற்கையின் மிகுதியில் வழங்கப்பட்டிருக்கிறது என மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியை குறிப்பிட்டிருக்கிறது.
இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாகவே கவர்ந்திருக்கிறது. அதனை பார்த்த பலரும், அருமையாக இருக்கிறது, அழகான பின்னணி இசையோடு கோர்த்து பகிர்ந்திருப்பது அம்சமாக இருக்கிறது என பலரும் ட்வீட்டியிருக்கிறார்கள்.
இருப்பினும் சிலர் ரயில்வே துறையின் அலட்சியங்களை சுட்டிக்காட்ட தவறவில்லை. சீனியர் சிட்டிசன்களுக்கான சலுகைகளை மீண்டும் கொண்டு வரக் கேட்டும், ரயில் பெட்டியின் உள்ளே பராமரிப்பை மேம்படுத்துவது போன்றவற்றை வலியுறுத்தியிருக்கிறார்கள்.