பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் பணிசெய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பேன் என பேசி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த பெரிய காப்பான் குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தமிழ்ச்செல்வி அரங்கநாதன். இவர் பணியை செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல் தீக்குளிப்பேன் எனக்கூறி மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த ஆடியோவில் “நான் பெரிய காப்பாங்குளம் பெண் ஊராட்சி தலைவர் என்பதால் ஊராட்சியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பள்ளிகளுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் அந்த பணியை அதிமுக கட்சிக்காரர்கள்தான் செய்ய வேண்டும்; உங்களுக்கு கையெழுத்து போடும் பணி மட்டுமே என மிரட்டல் சிலர் விடுக்கின்றனர். மீறினால் ஏற்கனவே பி.கே.வீரட்டிகுப்பம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் குடிமராமத்துபணியை செய்ததற்கு, திருட்டுதனமாக மண் வெட்டியதாக ஊமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தது போலவே, இங்கும் காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்வோம் என சின்ன காப்பான் குளம் அதிமுக பிரமுகர் மிரட்டுகிறார்.
இதனை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆதலால் தாங்கள் இதுகுறித்து முறையான விசாரணை செய்து ஊராட்சியின் நிர்வாகத்தில் தனிநபர்கள் கட்சி பெயரை சொல்லி இடையூறு செய்யாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் ஊராட்சி தலைவர்கள் நிர்வாகத்தில் கணவனுடைய தலையீடு இல்லாமல் செயல்பட உத்தரவிட்டது போல, கட்சி பெயரை சொல்லி தனிநபர்கள் இடையூறும் இல்லாமலிருக்க நடவடிக்கை வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் தீக்குளிப்பேன்” என அழுது கொண்டே கூறியுள்ளார்.
இதுகுறித்து பெரிய காப்பான் குளம் பெண் ஊராட்சி மன்ற தலைவரை தொடர்பு கொண்டு பேசியபோது, “அதிமுக பிரமுகர்கள் பணியை செய்யவிடாமல் தடுக்கின்றனர். அதன் காரணமாக வாட்ஸ் அப்பில் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஆடியோ அனுப்பினேன். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தொலைபேசியில் தன்னிடம் விசாரணை செய்தது” எனத் தெரிவித்தார்.