இந்தியாவின் மதிப்பீட்டை உயர்த்தியதற்காக மூடிஸ் நிறுவனத்தை கொண்டாடும் இதே மத்திய அரசுதான் சில மாதங்களுக்கு முன் அந்நிறுவனத்தை குறை கூறியிருந்தது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் ஒரு படி உயர்த்தி அறிவித்துள்ளதாகவும், இது மத்திய அரசின் சீர்திருத்தங்களுக்கு கிடைத்த பரிசு எனவும் மத்திய நிதியமைச்சர் ஜெட்லி பெருமிதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மூடிஸ் நிறுவனத்தின் மதிப்பு குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் நாடுகளின் கடன் தகுதி மதிப்பீட்டை கணிக்க மூடிஸ் கையாளும் வழிமுறைகளில் குறைகள் இருந்ததாக அப்போதைய மத்திய அரசின் செயலாளர் எழுதியிருந்த கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்தியாவின் மதிப்பீட்டை உயர்த்தியதற்காக மூடிஸ் நிறுவனத்தை கொண்டாடும் இதே மத்திய அரசுதான் சில மாதங்களுக்கு முன் அந்நிறுவனத்தை குறை கூறியிருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.