அதி அற்புத அழகு நிறைந்த பகுதியாக பனிப்பிரதேசம் விளங்கினாலும் அதிலும் அதிகளவு ஆபத்து நிறைந்து இருக்கும்.
இந்தியாவை பொறுத்த வரையில் இமயமலையைச் சார்ந்த இடங்களில், பனிபிரதேசம் அதிகமாக காணப்படும். ஆகையால் பனிசறுக்கு வீரர்கள் இத்தகைய இடங்களை தேர்வு செய்து பனிசறுக்கில் சாகசம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் குல்மார்க் பகுதியில் அதிகளவு பனிமழை பெய்து வருவதைத் தொடர்ந்து ஆங்காங்கே பனிச்சரிவும் நடந்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துடன், போக்குவரத்து முடங்கி உள்ளது. பல சாலைகள் பனியால் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா செல்பவர்களும் பாதிப்புக்குளாகி இருக்கின்றனர்.
இந்நிலையில், குல்மார்க் பகுதியில் நேற்று பனிசறுக்கு வீரர்கள் சிலர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பனிசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் பனிமழையைப் பொருட்படுத்தாது சாகசங்களை நிகழ்த்தி வருகையில் திடீரென்று ஏற்பட்ட பனி சரிவால், மூன்று வீரர்கள் பனியின் அடியில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இதில் ரஷ்யாவைச் சேர்ந்த பனிசறுக்கு வீரர் ஒருவர் இறந்துவிட்டார் என்றும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் சிலரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் காணாமல் போன பனிசறுக்கு வீரர்களை மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடிவருவதாகவும் மற்ற வீரர்களை 5 பேரை அங்கிருந்து மீட்பு படையினர் மீட்டுள்ளதாக ANI செய்தி தகவல் வெளியிட்டு இருந்தது. அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.