அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறது என துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்றைய தினமே தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எனினும் தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் கூறி வந்தனர்.
இந்தச் சூழலில் இன்று சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு பரப்புரையை தொடங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்துக்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களும் இடம்பெற்றன. ஆனால் பேச்சுவார்த்தையில் இழுப்பறி நிலவியதால் விஜயகாந்த் படம் மட்டும் இடம்பெறாமல் இருந்தது.
இதையடுத்து கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியது. இதில் இரண்டு தொகுதிகள் தனித்தொகுதிகள் என கூறப்படுகிறது. ஆனால் தனித்தொகுதிகளை ஏற்க தேமுதிக தயங்குவதே இழுப்பறிக்கு காரணம் என கூறப்பட்டது.
இருந்தாலும் திமுக தனது தொகுதி பங்கீடுகளை முடித்துள்ள நிலையில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
இதைத்தொடர்ந்து அதிமுக கூட்டணி குறித்த பொதுக்கூட்டத்தின் மேடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படம் இடம்பெற்றுள்ளது. தேமுதிக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும் அதிமுக விஜயகாந்தின் படத்தை வைத்துள்ளது.
இதுகுறித்து துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறது எனத் தெரிவித்தார்.