தென்காசி கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்ததையடுத்து, தமிழகத்தின் 35-வது மாவட்டமாக தென்காசி உதயமானது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகம் ஆயிரப்பேரி எனுமிடத்தில் அரசுக்கு சொந்தமான விதைப் பண்ணையில் அமையும் என மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிவித்தார். இந்த இடத்தில் கலெக்டர் அலுவலகம் அமைவதற்கு தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவ்விவகாரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் கூறுகையில், ‘’தென்காசி மாவட் ஆட்சியர் அலுவலகம் ஆயிரப்பேரியில் அமைக்க பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் இரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. பல முறை தங்களை சந்தித்தும் பல்வேறு இடங்கள் இருப்பதையும், பொதுமக்கள் வந்து போகக்கூடிய போக்குவரத்து வசதிகள் உள்ள இடத்தில் அமைய வலியுறுத்தி நேரில் பல முறை மனுக்கள் கொடுத்துள்ளோம்.
சட்டமன்றத்திலும் நான் இது குறித்தும் விரிவாக பேசியுள்ளேன். நானும் ஆயிரப்பேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைவதாக உள்ள இடத்தை நேரில் சென்று பார்த்துவிட்டு அது சதுப்பு நிலம் மூன்று புறமும் குளம் உள்ளது, போக்குவரத்து வசதியே செய்ய முடியாது, வருடத்திற்கு 6,7,மாதங்கள் தண்ணீர் நிற்கும் பகுதி என்பதை கலெக்டரிடம் நேரில் சுட்டிக்காட்டினேன். பொது மக்கள் வசதியுள்ள இடத்தில்தான் அமையும் என்று கலெக்டரும் என்னிடம் கூறினார். ஆனால் தற்போது ஆயிரப்பேரியில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைத்திட பல்வேறு இடங்கள் இருப்பதை நானும், எதிர்கட்சிகளும் பல சமூக அமைப்புகளும் சுட்டிகாட்டியுள்ளோம். தென்காசி ஈஸ்வரம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 10 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், உபயதாரர்கள் சம்மதம் தெரிவிப்பதாகவும் சொல்கிறார்கள். கல்வித் துறை ஒப்புதல் பெற்றால் மட்டும்போதுமானது. இந்த இடத்தில் அமைந்தால், புதிய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், அரசு மருத்துவமனை என மக்கள் வந்து செல்லும் இடமாகவும் ,போக்குவரத்து வசதியுள்ள இடமாகவும் இருக்கிறது. மங்கம்மா சாலை அருகே இருக்கிற அரசு நிலம், இலத்தூர் அருகே இருக்கிற இந்துசமய அறநிலையத்துறை இடம் என பல்வேறு இடங்கள் உள்ளது.
ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்கள், யாருக்கும் உகந்ததாக இல்லாத ஆயிரப்பேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைவதை மறுபரிசீலனை செய்து மக்கள் பயன்பெறுகிற இடத்தில் அமைத்திட வேண்டும்’’ என்றார்.
ஆலங்குளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான பூங்கோதை ஆலடி அருணா கூறுகையில், ‘’அண்மையில் 119 கோடியில் ஆயிரப்பேரில் கலெக்டர் அலுவலகம் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இடத்தை தேர்வு செய்வதற்கு பொதுமக்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை.
மேலும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி ஆயிரப்பேரி அமைந்துள்ளதால் அங்கு கலெக்டர் அலுவலகம் செயல்படும் பட்சத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், மக்கள் தடையின்றி அலுவலகம் வந்து செல்வதற்கு உகந்த இடத்தை மக்களிடமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகளின் கருத்தினை ஏற்று அமைவதை அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும்.
எங்கள் கோரிக்கையை ஏற்கப்படாவிட்டால் தொடர்ந்து களத்திலும் சட்டரீதியாகவும் போராடுவோம்’’ என்றார்.