வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையை விவிபேட் ஒப்புகைச் சீட் எண்ணிக்கையுடன் முறையாக சரிபார்க்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் நாளை புகார் அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தங்களது கூட்டணி கட்சி தலைவர்களை நாளை சந்திக்க பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.
இத்தகைய சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையரை நாளை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. தேர்தல் ஆணையரை சந்தித்து வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கையையும், விவிபேட் ஒப்புகை சீட்டின் எண்ணிக்கையும் முறையாக சரிபார்க்க வேண்டுமென வலியுறுத்த எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் இந்தப் புகாரினை அளிக்க உள்ளனர். வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவுள்ளன. அதேபோல், கொல்கத்தா வன்முறை சம்பவத்தில் பாஜக மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
காங்கிரஸ், தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகள், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக ஒன்று இந்தப் புகாரை அளிக்கவுள்ளனர். தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டுள்ளன.