போராடிய அனைவரும் சமூக விரோதிகளா? - ரஜினிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி

போராடிய அனைவரும் சமூக விரோதிகளா? - ரஜினிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி
போராடிய அனைவரும் சமூக விரோதிகளா? - ரஜினிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி
Published on

போராட்டங்கள் குறித்த ரஜினியின் கருத்தை திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரஜினி தலா ரூபாய் 2 லட்சம் வழங்கினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10,000 வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். உளவுத்துறையின் தோல்வியே போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவக் காரணம். சில போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன. போராட்ட பூமியாக இருந்தால் தொழிற்துறை, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது. போராட்டம் செய்யும்போது மக்களும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.

முதல்வர், பொன். ராதாகிருஷ்ணன், ரஜினிக்கு ஒரே இடத்தில் இருந்து உத்தரவு வருகிறது என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். மேலும், உயிரிழந்த 13 பேரில் யார் சமூகவிரோதி என்பதை பொன். ராதாகிருஷ்ணனும், ரஜினியும் விளக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் போராடிய அனைவரும் சமூக விரோதிகளா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ரஜினியின் கருத்து ஸ்டெர்லைட் ஆலையின் குரல் என்றும் ரஜினி வேண்டுமானால் போராடாமல் யாருக்கும் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினியின் கருத்து உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். மேலும், ரஜினி போன்றவர்களுக்கு போராட்டம் என்றாலே பிடிக்காது என்று அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்திற்கு நன்றி என்றும் முத்தரசன் கூறினார்.

இதனிடையே, போராட்டங்கள் எச்சரிக்கையோடு நடைபெற வேண்டும் என ரஜினி கூறியதை வரவேற்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், “உண்மைநிலையை விமர்சனங்களையும் மீறி எடுத்துச் சொல்வதே சரி. சமூக விரோதிகள் ஊடுருவியதாக நாங்கள் கூறியபோது எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தூத்துக்குடியில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனரா என்பதை காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும். காவல்துறையினர் தாக்கப்பட்டால் மக்கள் பாதுகாப்பு என்னவாகும்?” என்று தமிழிசை கூறினார்.

போராட்டத்தை ரஜினி கொச்சைப்படுத்துகிறார்; மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி  கூறியுள்ளார். மக்கள் போராட்டத்தை துப்பாக்கிச் சூடு நடத்திதான் ஒடுக்க வேண்டும் என்பது என்ன ஜனநாயகம்? என்று அதிமுக தோழமை கட்சி எம்.எல்.ஏ கருணாஸ் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com