மதுரையில் எதிரெதிர் வீட்டினரிடையே நடந்த மோதலில் கொடூர ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, பெத்தானியாபுரம், பாஸ்டின் நகர் பகுதியை சேர்ந்தவர் ரெஜினா. இவர் தனது கணவர் வெள்ளைச்சாமி மற்றும் மகன் முரளிதரனோடு 20 ஆண்டுகளுக்கும் மேல் அங்கு வசித்து வருகிறார். இவர்களுக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் லூர்துசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக சில ஆண்டுகளாக மோதல்போக்கு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக லூர்துசாமியை எச்சரித்து சென்றுள்ளனர்.
இதனால் ஏற்கனவே இருந்த முன்பகையை மனதில் வைத்து ரெஜினா குடும்பத்தினரே மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்திருக்கலாம் என நினைத்த லூர்துசாமி குடும்பத்தினர் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில் பயங்கர ஆயுதங்களால் ரெஜினா மற்றும் அவரது மகன் முரளிதரனை எதிர்வீட்டில் வசித்து வந்த சித்ரா, பிரின்ஸ், லூர்துசாமி, பாபு ஆகிய நான்கு பேரும் இணைந்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. எதிர்தரப்பினர் தாக்கியதில் ரெஜினாவின் இடது புருவத்தில் பலத்த ரத்தக்காயமும், முரளிதரன் கல்லால் தாக்கப்பட்டதில் தலை படுகாயத்துடனும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது ரெஜினா அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலி காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் லூர்துசாமி குடும்பத்தினர் ரெஜினாவையும், அவரது மகனையும் தாக்கும் கொடூர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.