ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதால் நேரடியாக வங்கிக்கோ அல்லது ஏ.டி.எம்மிற்கோ செல்லும் வேலை குறைவதால் உலகின் பெரும்பாலான மக்கள் இருந்த இடத்திலிருந்தே நிமிடத்தில் அந்த வேலையை முடித்து விடுகிறார்கள். ஆனால் இது எல்லா சமயத்திலும் உதவியாக இருந்திடாது.
ஏனெனில் ஆன்லைன் டிரான்ஸாக்ஷன் செய்வதில் பல குளறுபடிகள் ஏற்படுவதோடு சமயங்களில் இது விவகாரமாகவும் போய் முடிந்து விடுகிறது. அந்த வகையில் ஆசை ஆசையாக தனது முதல் மாத சம்பளத்தை தாய்க்கு அனுப்ப நினைத்த மலேசியாவைச் சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த நிகழ்வை அவரே தனது டிக்டாக் பக்கத்தில் கதறியபடி பதிவேற்றியிருக்கிறார்.
அதன்படி Fahada Bistari என்ற அந்த பெண் தன்னுடைய முதல் மாத சம்பளத்தை தனது அம்மாவுக்கு அனுப்புவதற்கு பதிலாக வேறு எவருக்கோ அனுப்பி வைத்திருக்கிறாராம். இது தொடர்பான அவரது டிக்டாக் வீடியோவில், “இன்னிக்கு என்னோட முதல் மாத சம்பளம் வந்திருக்கிறது. கொஞ்ச நாள்தான் வேலை செஞ்சேன். அதனால பெரிய தொகையா இருக்கல. இருந்தாலும் என்னொட அம்மாவுக்கு அனுப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.
ஆனா, மகிழ்ச்சியா இருந்தனால எதையும் சரி பார்க்காமால் வேற யாருக்கோ தவறுதலா அனுப்பிட்டேன். பணம் அனுப்பினதும் அதோட ரெசிப்ட்ட அம்மாவுக்கு அனுப்பி விசாரிச்சப்போதான் மாத்தி அனுப்பினது தெரிய வந்துச்சு.” எனக் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசியிருக்கும் அந்த பெண், பணத்தை பெற்றவரின் நம்பரை தொடர்புகொண்டு பேசிய போது, “அதை தானமா கொடுத்ததா நினைச்சுக்கோ” எனக் கூறியிருக்கிறாராம் அந்த நபர்.
“சொற்ப அளவிலான பணமாக இருந்தாலும் என் அம்மாவுக்கு அனுப்புவதாகதான் நினைத்தேன். ஆனால் இப்படி ஆகிவிட்டது. இது எனக்கு நல்ல பாடம்.” என டிக்டாக்கில் கதறியபடி ஃபஹேதா கூறியிருக்கிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அடுத்த நாளே அந்த நபர் பெண்ணுக்கு அவர் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பியிருக்கிறாராம்.