மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதியானது. மறுபுறம், காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. புதுச்சேரியில் ஒரு தொகுதி, தமிழகத்தில் 9 தொகுதிகள் என காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கட்டாயமாக 2 தொகுதிகளையும் மதிமுக 3 தொகுதிகளையும் கேட்டு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அப்போது சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளை வழங்குமாறு விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கோரப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து திருமாவளவன் கூறும்போது, வேண்டிய தொகுதிகளை தி.மு.கவிடம் கேட்டுள்ளதாகவும் சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. தமது கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவதாக ஈஸ்வரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.