சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் தாக்கல் செய்த மனுவில், மே18 ஆம் தேதி ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக எஸ்.ஐ. ரகுகணேஷ், தனது மூத்த மகன் துரையை தேடி சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது துரை வீட்டில் இல்லாததால், இளைய மகன் மகேந்திரனை அழைத்துச் சென்றதாக வடிவு கூறியுள்ளார்.
அதன்பின்னர், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் எஸ்.ஐ.ரகுகணேஷ் ஆகியோர் சுய நினைவை இழக்கும் அளவுக்கு மகேந்திரனை தாக்கியதாகவும், தலையில் காயம் ஏற்பட்டு ஜூன் 13-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் மனுதாரர் கூறியுள்ளார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் நீதிமன்ற காவலில் இருக்கும் தனது மகன் துரையும் விடுவிக்க மாட்டோம் என மிரட்டினர் என்றும் அதனால் அஞ்சி எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்றும் வடிவு மனுவில் கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்திருக்கும் நிலையில், தனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும், தனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வடிவு தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.