ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணியில் அனுபவ நாயகியாக இருக்கிறார் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை தேஜாஸ்வினி சவந்த். அவர் பதக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்று இங்கு பார்க்கலாம்.
நின்றவாறு, முழங்கால் இட்டபடி, தரையோடு தரையாக படுத்தபடி என மூன்று நிலைகளில் இருந்து இலக்கை குறிவைக்கும் போட்டிதான் ரைஃபிள் 3P போட்டி. இந்த பிரிவில் பங்கேற்கிறார் 40 வயது அனுபவ நாயகியான தேஜாஸ்வினி சவந்த்.
ஆனால், அவருக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் போட்டி. 2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் கடைசி கட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இப்போது அவரது நீண்ட கால கனவு நனவாகியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கோல்காப்பூரைச் சேர்ந்த தேஜாஸ்வினி சவந்த் 2019ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3P போட்டியில் 4ஆவது இடம் பிடித்தார்.
இதன்மூலம் ஒதுக்கீடு அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதேபிரிவில் அவர் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.
இதேபோல் 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். காமன்வெல்த் போட்டியில் மும்முறை தங்கம் வென்றிருக்கிறார். என்றாலும் ஒலிம்பிக் களம் அவருக்கு மிகுந்த சவால் நிறைந்ததாகவே இருக்கும்.