ஜீன்ஸ் பேன்ட் பல தரப்பட்ட மக்களுக்கும் பிடித்தமான ஒரு ஆடை வகையாகி இருக்கிறது. 10ல் 8 பேர் ஜீன்ஸ் பேண்ட் அணிவதையே விருப்பமாகக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்கத்திய பழக்கங்கள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தாண்டி உலகம் முழுவதிலும் பரவியிருப்பதில் ஜீன்ஸ் பேண்டுக்கும் தனிப்பங்கு உண்டு. ஜீன்ஸ் பேண்ட் இல்லாத அலமாரிகளே இருக்க முடியாது என்ற அளவுக்கு அது நீக்கமற நிறைந்திருக்கிறது.
இப்படி இருக்கையில் 1879ம் ஆண்டு தேதியிட்ட ஒரு ஜோடி ஜீன்ஸ் பேண்ட் இன்றளவும் கிழியாமல், மங்காமல் அதே உறுதித் தன்மையோடு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அதனை போட்டோவாகவே எடுத்து figensezgin என்ற வரலாற்று ஆர்வலரின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அந்த ட்வீட்டில் 1879ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பழமையான லெவிஸ் ஜீன்ஸ் ஜோடி இது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அந்த ஜீன்ஸ் பேண்ட் கிழியாமல், எந்த பாதிப்பும் ஏற்படாமல் இப்போதும் அணியும் அளவுக்கு அத்தனை பொறுத்தமாகவே இருப்பதாக தெரிகிறது.
இந்த ட்வீட் வைரலாகவே நெட்டிசன்கள் பலரும் கலவையான கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதில், “என்னுடைய லெவிஸ் ஜீன்ஸ் ஒன்றரை ஆண்டுகளிலேயே மக்கிவிட்டது. தற்போது நேரமும், தரமும் மாறிவிட்டது” என பயனர் ஒருவர் ட்வீட்டியிருக்கிறார்.
மற்றொருவர், “ஏகப்பட்ட வகைகளில் தற்போது ஜீன்ஸ்கள் சந்தைகளில் விற்கப்பட்டாலும் இதுதான் நல்ல தரமான ஜீன்ஸ் பேண்ட்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜீன்ஸ் பேண்டின் வரலாறு தெரியுமா? அதுவும் அந்த குட்டி பாக்கெட் பற்றி? அதைப்பற்றி காண்போம்:
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ என்ற பகுதியில் ஜேகப் டேவிஸ் என்ற தையல்காரர் இருந்தார். அவரிடம் 1850ம் ஆண்டு சமயத்தில் ரொனோ பகுதியைச் சேர்ந்த கடுமையாக உழைக்கும் தொழிலாளியின் மனைவி ஜேகப் டேவிஸிடம் வந்து, தனது கணவருக்கு அவரது உழைப்பை போலவே கடுமையாக உழைக்கும் ஒரு பேண்டை தைத்து கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார்.
இதையடுத்து, லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கோ என்ற நிறுவனம் தயாரிக்கும் டெனிம் வகை துணிகளை வாங்கி, அதில் கிழிந்துவிடும் என எண்ணவைக்கும் பகுதிகளில் ரிவிட்டுகளை அடித்து எளிதில் கிழியாத வகையில் ஒரு பேண்டை உருவாக்கினார்.
இப்படிதான் உலகின் முதல் உறுதித்தன்மை வாய்ந்த ஜீன்ஸ் பேண்ட் உருவானது. டெனிம் துணிகளால் ஆன பேண்ட்டிற்கு ஜீன்ஸ் பெயர் வந்ததற்கும் ஒரு கதை உண்டு.
இதனிடையே, தன்னுடைய ஜீன்ஸ் பேண்ட் தயாரிப்புக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எண்ணிய ஜேகப் டேவிஸ், டெனிம் தயாரிக்கும் லெவி ஸ்ட்ராஸின் நிறுவனத்துடன் இணைந்து ஜீன்ஸ் பேண்ட்கான முழுமையான காப்புரிமையை 1873ம் ஆண்டு மே 20ம் தேதி பெற்றிருக்கிறார். அதனையடுத்தே லெவிஸின் ஜீன்ஸ் உலகம் முழுவதும் பிரபலமானது.
தற்போது ஜீன்ஸ் பேண்ட்டில் உள்ள குட்டி பாக்கெட் குறித்து பார்ப்போம்:
ஜீன்ஸ் பேண்ட்களில் முன்புறம் வலது பக்கம் உள்ள குட்டி பாக்கெட்டுகளில் தற்போது பஸ் டிக்கெட், சில்லறை காசுகள், சாவி போன்றவற்றை வைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், முன்னொரு காலத்தில் cowboys ஜீன்ஸ் அணிந்திருந்த போது, லாக்கெட்கள் எனக் கூறக்கூடிய செயின் வடிவிலான கடிகாரங்களை வைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் அந்த குட்டி பாக்கெட்.